சிறைக் காவலாளிகளாக 1200 பேரை ஆள்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை!

Wednesday, April 25th, 2018

நாட்டில் கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் நிலவிய சுமார் ஆயிரத்து 550 பதவி வெற்றிடங்களை நிரப்பும் முகமாக இவ்வாண்டு முதல் சிறைச்சாலை முறைமையை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது: கடந்த ஆண்டு முதல் சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவிய உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 2017 ஆம் ஆண்டில் சிறைச்சாலைக் காவலாளிகள் 350 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவ்வாண்டில் ஆயிரத்து 200 சிறைச்சாலைக் காவலாளிகளை ஆள்சேர்ப்புச் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான நேர்முகப் பரீட்சைகளை நடத்தி ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதிக்குள் ஆயிரத்து 200 உத்தியோகத்தர்களுக்கும் உரிய உடற்பயிற்சிகளை வழங்கி சேவைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயம் சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகள், வன்முறைகள், போன்றவற்றைத் தடுக்கும் முகமாக சிறைச்சாலைகளெங்கும் மறைகாணி கருவிகளையும் கையடக்க அலைபேசியூடான செய்திகளைத் தெளிவற்றதாக்கும் முறைமையொன்றையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு  வருட காலத்துக்குள் ஆயிரத்து 500 க்கும் கூடுதலான வேலைவாய்ப்புகளை சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுக்க முழு ஒத்துழைப்பை நல்கிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எனது அமைச்சின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றுள்ளது.

Related posts: