இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதியான எட்டு நவீன இயந்திரங்கள் அன்பளிப்பு!

Saturday, August 14th, 2021

கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தவென சிங்கப்பூரிடமிருந்து நவீன இயந்திரங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் இலங்கை கடற்கரையோரங்களை சுத்தப்படுத்துவதற்காக சிங்கப்பூரில் இருந்து சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்த 08 இயந்திரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த 08 இயந்திரங்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொழம்பகேயினால் உத்தியோகபூர்வமாக கடற்கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நிலங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன சில்வாவிடம் கையளிக்கப்பட்டன.

சிங்கப்பூரின் ‘த எலையன்ஸ் என்ட் பிளாஸ்ரிக் வேஸ்ட்’ அமைப்பின் மூலம் இந்த 08 இயந்திரங்களும் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை தூதரக ஆணையாளர் சசிகலா பிரேமவர்தன ஆகியோரின் முயற்சியினால் இந்த உபகரணங்கள் கிடைத்துள்ளன.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தின் காரணமாக இலங்கை கடற்கரைகளில் தேங்கிய பிளாஸ்ரிக் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்காக இந்த இயந்திரம் உபயோகிக்கப்படுமென சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த இயந்திரத்தின் மூலம் மணல்களில் கலந்துள்ள சிறு சிறு பிளாஸ்ரிக் துகள்களைக் கூட வெவ்வேறாக பிரித்து எடுக்க முடியும். இதற்கமைய தற்பொழுது கைகளால் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தி மணல் மற்றும் பிளாஸ்ரிக் துண்டுகளை வேறுபடுத்தும் பணியை இனிமேல் மிகவும் விரைவாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்ற கடற்கரை சுத்தப்படுத்தும் 08 இயந்திரங்களைக் கொண்டு முதலில் உஸ்வெட்டகெய்யாவ சரக்குவ கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன்பின்னர் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்து காரணமாக பாதிப்புற்ற உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையை தவிர பாதிக்கப்பட்ட ஏனைய கடற்கரைகளையும் மிக விரைவாக சுத்தப்படுத்த குறித்த இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதெனவும் சமுத்திர சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பினை ஆய்வு செய்து அதற்கு பொருத்தமான நட்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்காக நீதி அமைச்சரின் தலைமையின் கீழ் 05 குழுக்கள் கலந்தாலோசனை நடத்தி வருகின்றன என இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன சில்வா தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களிடம் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் கேட்டிருந்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சிங்கப்பூரின் அரசு சார்பற்ற ஒரு நிறுவனத்துடன் கலந்தாலோசித்தது. அதன் பயனாக சுமார் 180,000 அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்த கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை அந்நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குறித்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர ‘இந்த இயந்திரத்தின் மூலம் மணல் வேறாகவும் பிளாஸ்டிக் துண்டுகளை வேறாகவும் பிரித்தெடுக்க முடியும். மிகச் சிறிய துணிக்கை பிளாஸ்ரிக் துண்டுகளை கூட வேறு வேறாக பிரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: