இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை வழங்கிய இளஞ்செழியன்!

Thursday, September 29th, 2016

 

2011 ஆம் ஆண்டு நீர்வேலியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

யாழ். வரலாற்றில் இரட்டைக்கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி நீர்வேலி பகுதியில் தனது சகோதரியான உதயகுமார் வசந்திமாலா மற்றும் அவரது கணவர் மார்கண்டு உதயகுமார் ஆகியோரைக் கொலை செய்து, அவர்களது மகனைத் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கின் பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவரும் அவரது சகோதரியும் அச்சுறுத்தல் காரணமாக கனடாவிற்கு புலம்பெயர்ந்துள்ளமை வழக்கு விசாரணையின்போது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்டவரின் மகள் கனடாவிலிருந்து வருகை தந்து யாழ். நீதிமன்றத்தில் நேரில் கண்ட சாட்சியம் அளித்துள்ளார்.

இதற்கமைய, இந்த வழக்கில் பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று அறிவித்தார்.

மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் மகனை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும், ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நீர்வேலி இரட்டைக்கொலை சம்பவம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Capture-118

Related posts: