முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முரண்பட்ட பல்கலை மாணவர்கள் பொன் சிவகுமாரனின் நினைவு தினத்தை திரும்பிக்கூடப் பார்க்காதது ஏன் – மூத்த ஊடகவியலாளர் கோவைநந்தன்!

Wednesday, June 6th, 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், மாணவனாக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக மரணித்த போராளியான பொன் சிவகுமாரனின் நினைவு தினத்தை திரும்பிக்கூடப் பார்க்காதது ஏன் என மூத்த ஊடகவியலாளர் கோவை நந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொன்.சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் மற்றும் விடுதலை வித்துக்கள் தினமும் ஒருங்கே கடைப்பிடிக்கப்பட்ட தினத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  –

பல்கலைக்கழக மாணவர் உள்வாங்கலில் ஏற்பட்ட தரப்படுத்தல் முறைமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து மாணவர் சமூகத்தின் எதிர்காலத்திற்காக போராட்டங்களை முன்னெடுத்த மாணவர் பொன் சிவகுமாரனின் 44 ஆவது நினைவு தினம் விடுதலை வித்துக்கள் தினமாக அஞ்சலிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகள்; அவ்வப்;போது ஆங்காங்கே நினைவுகூரப்படும் நிகழ்வாக அல்லாது இவ்வாறான தியாகிகள் தினங்களை ஒரு வரலாற்று நிகழ்வுகளாக நினைவு கூரப்படவேண்டும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் யாழ்ப்பாண மாணவர்களது பங்களிப்பு என்பது அளப்பரியது.  பொன்.சிவகுமாரன் மாணவனாக இருந்த காலத்தில் தியாகம் என்பது எமது போராட்டங்களுக்கெல்லாம் முதன்மையாகவும் உந்துசக்தியாகவும் விளங்கியிருந்தது.

1971 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு எதிரான தரப்படுத்தல் சட்ட மூலத்தை எதிர்த்து தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாணவர்களின் எழுச்சி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த இளைஞர் மாணவர் எழுச்சி போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியவர் பொன் சிவகுமாரன்.

பின்னர் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண வீரசிங்க மண்டப முன்றலில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 11 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை நேரில் பார்த்ததில் இருந்து வீறு கொண்ட வேங்கையாக அரச காவல்துறையினர் மீதான தாக்குதல்களை ஆரம்பித்து எமது இனத்தின் மீதிருந்த அடக்குமுறைகளை களைந்தெறிவதற்காக  தியாகி சிவகுமாரன் முன்னின்று போராடியிருந்தார்.

இவ்வாறு மாணவப் பருவத்திலேயே எமது இனத்தின் விடியலிற்காக தன் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் தியாகி சிவகுமாரன் முதல் இடம் பெறுகிறார்.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது தமிழ் மக்களிடையே பல முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்> மாணவனாக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக மரணித்த போரளியான பொன் சிவகுமாரனின் நினைவு தினத்தை திரும்பிக்கூடப் பார்க்காதது ஏன் என மூத்த ஊடகவியலாளர் கோவை நந்தன் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

103 02 01 DSC_0052 2 4 9

Related posts: