முல்லைத்தீவில் தேர்தல்: அமைச்சரவை அனுமதி!
Thursday, November 10th, 2016
இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்குத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன்போது மீள்குடியமர்வைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்திப்போடுமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைவாகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீள்குடியமர்வு பூர்த்தியடைந்த பின்னர் 2014ஆம் ஆண்டு மீளவும் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முதல் நாள், நீதிமன்றம் மீளவும் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. 2011ஆம் ஆண்டு வேட்பு மனுத்தாக்கலின் அடிப்படையில் தேர்தல் நடத்த முடியாது என்று நீதிமன்று தெரிவித்திருந்தது.
குறித்த தேர்தலைக் கலப்புத் தேர்தல் முறையில் நடத்துவதற்கும் தேவையான வகையில் சட்டத்தில் மாற்றங்களைச் செய்து சட்டமாக்குவது தொடர்பில் சட்டத்தரணிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


