கூட்டமைப்புக்குள் குழப்பம் : முதலமைச்சரின்  உத்தரவையும் மீறி பிரதி அவைத்தலைவர் தெரிவு  இன்று?

Thursday, October 27th, 2016

வடமாகாண முதலமைச்சரின் உத்தரவையும் மீறி பிரதி அவைத்தலைவர் தெரிவு இன்றைய தினம் நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ் அரசு கட்சி சார்ந்த ஒருவரை அப்பதவியில் நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்றையதினம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்குரியவரை தெரிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றையதினம் இடம்பெறவுள்ள அமர்வில் பிரதி அவைத்தலைவர் பதவி தெரிவு செய்யப்படவுள்ளதாக நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1ஆவது வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக தமிழரசுக் கட்சியை சேர்ந்த முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அன்ரனி ஜெயநாதன் தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்ற வருடங்களாக அவர் பிரதி அவைத்தலைவர் பதவி வகித்த போதிலும் ஒருமுறையே சபை நடத்தும் சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் மாரடைப்பு காரணமாக பிரதி அவைத்தலைவர் உயிரிழந்ததனை அடுத்து அந்த பதவி வெற்றிடமாகியது.

அந்த பதவியை பெறுவதற்கான போட்டிகளும் அதிகரித்தன. எனினும் அன்ரனி ஜெகநாதன் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பதனால் அந்த பதவியை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியினர் கோரிவருகின்றனர். அதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவருடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது.

முதலமைச்சர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரதி அவைத்தலைவர் பதவியை தனிக்கட்சி சார்பாக ஒருவருக்கு வழங்கும் நடவடிக்கைகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். அவசர அவசரமாக நடைபெற்ற இந்த முயற்சிகளுக்கு சக உறுப்பினர்கள் இன்று இடம்பெறவுள்ள மாகாணசபை அமர்வின் போது ஆதரவு வழங்கவேண்டுமெனவும் சம்பந்தப்பட்டோரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இத்தெரிவு கட்சி ரீதியாக அன்றி மாவட்ட ரீதியாகதான் இடம்பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் இல்லாத நேரம் இத்தெரிவு நடைபெறுவதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கூட இன்று இடம்பெறவுள்ள மாகாண சபையின் அமர்வில் பிரதி அவைத தலைவரை தெரிவு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் தான் நாடு திரும்பும் வரையில் பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்ய வேண்டாம் என அவைத் தலைவர் மற்றும் பதில் முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.

பதில் முதலமைச்சரும் முதலமைச்சர் வந்த பின்னர் அவைத்தலைவர் தெரிவை நடத்துமாறும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவை அனைத்தையும் மீறி இன்று இடம்பெறவுள்ள மாகாண சபையின் நிகழ்ச்சி நிரலில் பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்வது குறிப்பிடப்பட்டுள்ளது.

northern provincil councial 66547

Related posts: