பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கவலை!

Tuesday, March 29th, 2022

பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர் கவலை வெளியிட்டுள்ளார்.

“இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பதைத் தொடர்புகொண்டு கேட்டுக்குமாறு உயர் ஆணையர் பாக்லேவைக் கேட்டுக்கொள்கிறேன்,” எனவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விநியோகஸ்த்தரிடமிருந்து ஏற்பட்ட தாமதம் காரணமாக சத்திர சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்து ஒன்று தற்போது கிடைக்கவில்லை என உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துகளை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சின் செயலாளரான வைத்தியர் ஆர்.எம். சமன் குசும்சிறி ரத்நாயக்க, தெரிவித்தார்.

குறித்த மருந்தை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் பல வைத்தியசாலைகள் மருந்துகளை வைத்திருப்பதாகவும், எனினும், மருந்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: