மின்ஜம் சூறாவளி இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 5th, 2023

தென்மேற்கு வங்காளா விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த மின்ஜம் சூறாவளியானது, இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த “MICHAUNG” (மிக்ஜம்) சூறாவளியானது நேற்றிரவு 11.30 மணியளவில் வட அகலாங்கு 14.5 கு இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.3கு இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 520 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுதியானது மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமேற்கு திசையில் இலங்கையை விட்டு விலகி வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், வடக்குத் திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இந்த சூறாவளியின் தாக்கத்தினால் தமிழ் நாட்டின் சென்னை நகரம் கடுமையாக நேற்று பாதிக்கப்பட்டதோடு, 8 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

மிக்ஜம் சூறாவளி காரணமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சென்னையில் பலத்த மழை பெய்த நிலையில், சுமார் 10 ஆயிரம் பேரளவில் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் இந்தியச் செய்திச் செய்திகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினமும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

000

Related posts: