தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை!

Thursday, April 7th, 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும்,  மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு  உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி , புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

HRNCET 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சித் திட்டத்திற்கான முக்கூட்டு உடன்படிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும்,  மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணைப் பீடாதிபதி க்றோ அனிற்றா பெணஸ் ப்ளற்றன் மற்றும் பேர்கன் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணை முதல்வர் ஒய்விண்ட் ப்றட்டே ஆகியோரும் உடன்படிக்கையில்    கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேஜியத்  தூதுவர் ட்ரீனே ஜோரன்லி எஸ்கெடாலும் நிகழ்நிலையில் கலந்து கொண்டார். யாழப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜனும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் செயற்றிட்ட இணைப்பாளர் தயாளன் வேலாயுதபிள்ளை ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர். 

இந்த நிகழ்வின் போது நோர்வேயில் இருந்து வருகை தந்த இரு பல்கலைக்கழகங்களினதும் விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் உடன்படிக்கையின் மூலம் தூய சக்தி தொழில் நுட்பங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகப்  பல்கலைக்கழகங்களுக்கிடையில் இணைந்த முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts:


டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி - தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் த...
காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி சுட...
மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் -விசேட வர்த்தமானியும் வெளியானது!