பூநகரியில் தீ எல்லை மீறியது –  250 தென்னம்பிள்ளைகளும் வீட்டின் ஒரு பகுதியும் கருகின!

Wednesday, March 21st, 2018

பூநகரியில் பற்றைக்கு வைத்த தீ பரவியதால் சுமார் 250 தென்னம் பிள்ளைகள் எரிந்து அழிந்தன. வீடு ஒன்றின் பகுதியும் எரிந்தது என்று பூநகரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பூநகரி பரமங்கிராய் வெட்டுக்காடு பகுதியில் உள்ள பற்றைக் காணியை அதன் உரிமையாளர் துப்பரவு செய்யத் தீர்மானித்துள்ளார். இரண்டு பேரை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்துச் சென்று துப்பரவு பணி இடம்பெற்றது. பற்றைகளை வெட்டி அவற்றுக்குத் தீ மூட்டினார்.

பற்றைக் குவியல் கொழுந்துவிட்டு எரிந்தது. வெயில் வெட்கையும் தீவிரமாக இருந்தது. காற்று வீசத் தொடங்கியது. அதன்போது எரிந்து கொண்டிருந்த நெருப்பு காற்றில் பரவி அருகிலிருந்த தென்னம்பிள்ளைக் காணிக்குள் வீழ்ந்தது.

அதனால் சுமார் 250 தென்னம் பிள்ளைகள் தீயில் கருகி அழிந்தன. அதுமட்டுமன்றி அந்தக் காணிக்கு அருகிலிருந்த வீடு ஒன்றின் ஒரு பகுதியும் எரிந்தது.

சம்பவம் தொடர்பில் கிராம அலுவலர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். பொலிஸாரும் அங்குள்ள ஏனைய தென்னந் தோட்டக் காணிகளின் உரிமையாளர்களது இரண்டு தண்ணீர் பௌசர்களது உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காணியைத் துப்பரவில் ஈடுபட்டிருந்த இருவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போதைய காலநிலை வெயில் கூடிய காற்று அதிகமாக வீசும் நிலை காணப்படுகிறது. எனவே மதிய நேரங்களில் தீ மூட்டுவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related posts: