நாட்டின் பொருளாதார செயற்பாட்டு வரைபடங்கள்!

Thursday, November 2nd, 2017

இலங்கையின் பொருளாதார செயற்பாட்டு வரைபடங்கள் – 2013/14 தொகைமதிப்பு, மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட பொருளாதார தொகைமதிப்புக்கு (2014) இணங்க, விவசாயமல்லாத பொருளாதார துறையில் ஏறத்தாழ 1.02 மில்லியன் நிறுவனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2013/14 பொருளாதார தொகைமதிப்பின் பட்டியல்படுத்தும் படிநிலையின் காண்புகளை எடுத்துக்காட்டும் ‘ இலங்கையின் பொருளாதார செயற்பாட்டு வரைபடங்கள் – 2013/14 அண்மையில் வெளியிடப்பட்டன.

1871ம் ஆண்டின் குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு முதன்முறையாக நடாத்திய தெற்காசிய நாடு இலங்கை ஆகும். இருப்பினும், இதற்கு முன்னர் வௌ;வேறாக நடாத்தப்பட்ட விவசாய மற்றும் கைத்தொழில், வர்த்தகம், சேவைகள் தொகை மதிப்புகளை ஒன்றுசேர்த்து 2014ம் ஆண்டிலேயே முதற்தடவையாக பொருளாதாரத் தொகைமதிப்பொன்று நடாத்தப்பட்டது. மேலும், கொள்கைத் திட்டமிடல் பொருட்டு வியாபாரத் தரவுகளை பயன்படுத்துதல், பல்வேறு ஆராய்ச்சிகள், உற்பத்திகள் பொருட்டு புதிய சந்தைகளை இனங்காணுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த புள்ளிவிபரங்கள் முக்கியமானதாகும்.

இலங்கையில் நடாத்தப்பட்ட பொருளாதார தொகைமதிப்புக்கு (2014) இணங்க, விவசாயமல்லாத பொருளாதார துறையில் ஏறத்தாழ 1.02 மில்லியன் நிறுவனங்கள் கணக்கெடுக்கப்பட்டதுடன், அதில் 0.26 மில்லியன் கைத்தொழில் மற்றும் நிர்மாண நிறுவனங்கள் ஆகவும், 0.49 மில்லியன் வர்த்தக நிறுவனங்களாகவும், 0.34 மில்லியன் சேவைகள் நிறுவனங்களாகவும் காணப்பட்டன.

பொருளாதாரத் தொகைமதிப்பு மூலம் தொகுக்கப்பட்ட எண் சார்ந்த புவியியல் மற்றும் ஏனைய தரவுகளை ஒன்றுசேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த வரைபடங்கள் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள், அபிவிருத்தி நிபுணர்கள் மற்றும் ஏனைய அக்கறைதாரர்கள் ஆகியோர் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கும் கொள்கைகளை வகுப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய முக்கிய ஆதாரமாக கருதப்படலாம். நாட்டின் பொருளாதார செயற்பாடுகளின் பரம்பல், கைத்தொழில் துறையின் முக்கிய குறிகாட்டிகள், விசேடமாக குறிப்பிடத்தக்க முறைசாரா பொருளாதாரத் துறை அடங்கலாக சேவைத்துறையின் பரம்பல், சிறிய, நடுத்தர அளவு கைத்தொழில் விஸ்தரிப்பு, விவசாயமல்லாத பொருளாதாரத் துறையில் வேலைவாய்ப்பு வசதிகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொள்வதன் மூலம் பொருளாதார அபிவிருத்தி பொருட்டு பொருத்தமான பிரதேசங்களை இந்த வரைபடங்கள் மூலம் இனங்கண்டு கொள்ளலாம்.

வரைபடங்களின் பிரதான கருப்பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு நன்றாக தென்படும் விதத்தில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டிருப்பதுடன் சனத்தொகை அடர்த்தி, வறுமை போன்ற ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. வரைபடங்கள், நிர்வாகப் பிரிவுகள், துறைகள், பொருளாதாரத் துறைகள், இலங்கை நியமக் கைத்தொழில் வகைப்படுத்தல் (SLSIC), தாபன மற்றும் சேவையில் உள்ளோர் பரம்பல், அடர்த்தி வகைகள், சிறிய நடுத்தர அளவு தாபனங்களின் வகைப்படுத்தல்கள் என்பவற்றிற்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன. மேலதிக விளக்கங்கள் மற்றும் ஆய்வு பொருட்டு தேவையான இடங்களில் தரவு அட்டவணைகளும் கோட்டுப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, ‘பொருளாதார செயற்பாடுகள் பற்றிய வரைபடங்கள் – 2013/14’, கொள்கை, திட்டங்களை வகுத்தல், ஆராய்ச்சி, பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் கல்வி போன்றன பொருட்டு புதிய பரிமாணத்தில் தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடிய முக்கிய ஆதாரமாக அமையும் என தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வரைபடங்களின் பிரதிகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் www.statistics.gov.lk வெளியிடப்பட்டுள்ளது.

பணிப்பாளர் நாயகம்,

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

Related posts: