மாகாணங்களுக்கு இடையில் பொதுப்போக்குவரத்தும் முற்றாக இடைநிறுத்தம் – இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021

நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களுக்குள் உள்ளக பேருந்துகளை பயன்படுத்தி மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தி ,சுற்றுலா வங்கிச் சேவை ஊடகத்துறை விவசாயம் உட்பட அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு தமது அடையாள அட்டையைக் காண்பித்து அதன் மூலம் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தொடக்கம் கடுமையான முறையில் கண்காணித்து வருகிறார்கள். இதனால் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக  கடந்த நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டம் தடை செய்யப்படதை இன்றுமுதல் மாகாணங்களுக்கு இடையேயான அனைத்து பொதுப்போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.

இதேவேளை, 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதியுடன், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது, தடுப்பூசி அட்டையை பரிசோதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி வலியுறுத்தியிருந்தார்.

அதேநேரம் சுகாதாரம், துறைமுகம், விமான நிலையம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், விவசாயத்துறை மற்றும் முதலீட்டு சபையினால் அனுமதி வழங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் ஆகியோருக்கு மாத்திரம், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி உள்ளது.

அத்துடன், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களை சேவைக்கு அழைக்கும்போது, அவசியத்தன்மை கருதி, குறித்த மாகாணத்திற்கு வெளியே வசிக்கும் ஊழியர்களை அழைப்பதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் வரத்தக நிலையங்களில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பணியிடத்தின் இடப்பரப்பை கவனத்திற்கொண்டு, பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்க முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: