மலேரியாவை பரப்பும் நுளம்பினம் 270 கிணறுகளில் கண்டுபிடிப்பு – யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியாக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி!

Sunday, May 6th, 2018

குடாநாட்டில் 500 கிணறுகள் பரிசோதிக்கப்பட்டு அவற்றில் 270 கிணறுகளில் உயிர்கொல்லி நோயான மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மலேரியா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியாக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி மருத்துவர் என்.மரியசெல்வம் தெரிவித்தார்.

மலேரிய நோய் விழிப்புணர்வு தொடர்பாக யாழ்ப்பாணம் யூ.எஸ். விருந்தினர் விடுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் 2012 ஆம் ஆண்டு முதலாவது மலேரியா தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவகத்தால் மலேரியா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த நோய்த் தாக்கத்தால் இறப்புகள் கூட நிகழும். முதன் முதலாக குருநாகல் மாவட்டத்தில் நுளம்பின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் நோய்த்தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்க்கான ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியும் எமது நாட்டில் இல்லை. ஆனால் அந்த ஒட்டுண்ணியைக் காவிச்செல்லும் அனோபிளிஸ் நுளம்பினம் உண்டு. ஆகவே நோய்க்காவியான நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டோம்.

இதுவரையில் யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர் ஆகிய பிரதேசங்களில் ஆயிரத்து 500 கிணறுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 270 கிணறுகளில் நுளம்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கிணற்றில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இவ்வாறு நாம் கிணறுகளைப் பரிசோதனை செய்யும் போது எமக்குப் பெரும் சிக்கல் நிலை காணப்படுகின்றது.

பாவனையில் இல்லாத கிணறுகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றில் மலேரியா நுளம்புத் தாக்கம் இருந்தால் அந்தக் கிணறு யாருக்குச் சொந்தம் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பதில் குழப்பங்கள் உள்ளன.

ஆகவே நுளம்பின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும். நுளம்பு வலைகளைப் பயன்படுத்த வேண்டும். கிணறுகளை உரிய முறையில் மூடுதல் வேண்டும் என்றார்.

Related posts: