மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்!

மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனை சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தன்னிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மருந்துகள் வருவதில் தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சில மருந்துகள் 90 நாட்கள் வரை தாமதமாகலாம் எனவும் அதற்கமைவாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் சில மருந்துகளுக்கு குறிப்பிடத்தக்க தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகளும் விளையாட்டின் போது ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ,நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியும், செஞ்சிலுவைச் சங்கமும் இலங்கைக்கு உதவுகின்றன. இந்தியாவின் கடனுதவியின் கீழ் தேவையான மருந்து வகைகளை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது இதற்குத் தேவையான கடன் ஆவணமும் வெளியிடப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகள் மருந்துப் பற்றாக்குறை நிலவும் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|