மருந்துப் பொருட்கள் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறுத்தம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

தபால் நிலைய ஊழியர்களின் ஊடாக மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொரொனா தொற்று பரவல் காரணமாக, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கான, ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைவாக, அரச வைத்தியசாலைகளினால் மற்றும் அரச மருந்தகங்களின் ஊடாக வழங்கப்படும் மருந்துப் பொருட்களை உரிய தரப்பினருக்கு விநியோகிக்கும் நடவடிக்கை தபால் திணைக்கள ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தபால் திணைக்களத்தின் பணிகளையும் எதிர்வரும் நாட்களில் சாதாரண நிலைமைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியிருப்பதால், தொடர்ந்தும் மருந்துப் பொருட்களை விநியோகிப்பது சிரமமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, சுகாதார தரப்பினரின் அனுமதியுடன், மருந்துப் பொருட்களை தபால் நிலைய ஊழியர்களின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கை, இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தபால் மா அதிபர், அது தொடர்பில் அவதானம் செலுத்தி, உரிய தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|