மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் அவமதிப்பு வழக்கு !

Tuesday, January 31st, 2023

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரையிலான உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்கு சமர்பித்த உடன்படிக்கைக்கு இணங்கத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபையின் தலைவர் அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிடுகிறது.

உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மேற்படி தரப்பினர் சமரசம் செய்து கொண்ட போதிலும், இலங்கை மின்சார சபை வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் வகையில் தீர்வைப் புறக்கணித்து மின்வெட்டைத் தொடர்ந்ததாக ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

பரீட்சை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு இலங்க மின்சார சபையின் அப்பட்டமான அலட்சியம், மாணவர்களின் கல்வி உரிமையை மீறும் செயலாகும் என ஆணைக்குழு கருதுகிறது.

மின்சாரத்தை வழங்குவதற்கு அர்த்தமுள்ள வழிகள் இருப்பதாக ஆணைக்குழுவின் முன் ஒப்புக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட்ட போதிலும் மின்சார சபை உத்தரவாதத்தை புறக்கணித்து மின்வெட்டுகளை முன்னெடுத்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டுகிறது.

சட்டம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வேண்டுமென்றே இழைக்கப்பட்ட அவமதிப்பு என ஆணைக்குழு கண்டறிந்துள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வ...
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு - மனநல வைத்திய நிபுணர்கள் எச்சர...
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரி...