மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் :  ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம்  – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Wednesday, August 29th, 2018

எமது தாயகப் பரப்பின் எல்லைக்குள் மகாவலி ஊடுருவ முற்படும்போது அந்த இடத்திலிருந்து மகாவலி கரையோரங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் எமது தமிழ் பேசும் மக்களே அன்றி வேறொரு இனமாக இருக்க முடியாது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடைபெற்றுவரும் மகாவலி அபிவிருத்தி திட்டத்தினூடான சிங்களக் குடியேற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் இதுதான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.

“நைல் நதி” எங்கெல்லாம் பாய்கின்றதோ அங்கெல்லாம் ஸ்ரேலியக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என பாலஸ்தீன மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு ஸ்ரேலிய சிந்தனை வெறியர்கள் எவ்வாறு திட்டங்களைத் தீட்டினார்களோ அதுபோலத்தான் அன்று மகாவலி அபிவிருத்தி திட்டம் இங்க ஆரம்பிக்கப்பட்டபோது மகாவலி எங்கெல்லாம் பாய்கின்றதோ அங்கெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என எழுதப்படாத சட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.

ஆனால் இன்று மகாவலி அபிவிருத்தி திட்டமானது வடக்கு நோக்கி பாய்ந்துவரப் போகின்றது. எங்களைப் பொறுத்தளவில் நாம் மகாவலி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

அதாவது நீரை மட்டும்.  ஏனென்றால் அந்த நீர் வடக்கு – கிழக்குத் தாயக மக்களுக்கு நிச்சயமாகப் பயன்பட வேண்டும். எமது பகுதிகளில் காலநிலை காரணமாக நிலத்தடி நீரின் தன்மை குறைந்து வருகின்றது. இதனால் எமது தாயகப் பிரதேசங்கள் பாலைவனமாகும் அபாயங்களை எதிர்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் எமது வடக்கு – கிழக்கு வாழ் மக்கள் அந்த நீரின் பயன்களை அனுபவிக்கவேண்டும் என்பது எமது விருப்பம். ஆனால் மகாவலித்  திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்படுவதை நாம் வெறுக்கின்றோம். அதனைக் கண்டிக்கின்றோம்.

எமது தாயகப் பரப்பின் எல்லைக்குள் மகாவலி ஊடுருவ முற்படும்போது அந்த இடத்திலிருந்து மகாவலி கரையோரங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் எமது தமிழ் பேசும் மக்களே அன்றி வேறொரு இனமாக இருக்க முடியாது. இதுவே எமது கட்டசியின் நிலைப்பாடு.

இதற்காக எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டங்கள் வெறும் பூச்சாண்டித்தனமாக இருக்க்க கூடாது. ஏனென்றால் இந்த மக்களை போராட அழைப்பதற்கு மாறாக இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலையில் இருக்கின்ற காரணத்தால், அரசாங்கத்துடன் பேசி நில அபகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.  ஆனாலும் அதற்கான அரசியல் பலத்தை அவர்கள் பெற்றிருந்தும் கூட அதை செய்யாது இன்று போராட்டம் என்று சொல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இருக்கும் அரசியல் பலம் எமது கட்சியிடம் இருந்திருக்குமேயானால் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிச்சயமாக கடந்த காலங்களில் தனது மதிநுட்ப சிந்தனையூடாக செயற்படுத்திக் காட்டியதுபோல அரசுடன் பேசி இந்தத் திட்டமிட்ட நில அபகரிப்பை தடுத்து நிறுத்தியிருப்பார்.

ஜனாதிபதி சொல்கின்றார் சிங்கள மக்களுக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை என்று. அவர் சொல்வது உண்மை என்றால் அதை நாம் வரவேற்போம். ஆனாலும் இது தொடர்பில் எம்மிடம் அதிகளவான அரசியல் பலம் காணப்படாது போதிலும் எமது மக்களின் நலனுக்காக அவர்கள் மீது கொண்ட பற்றுறுதிகாரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரைவில் சந்தித்து ஆரோக்கியமான பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: