போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் –  யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்!

Sunday, August 14th, 2016

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்டை நாடான இந்தியா குறிப்பாகத் தமிழ்நாடு எம்மால் முடிந்த உதவிகள் ஒத்துழைப்புக்களைச் செய்ய வேண்டியது எமது அடிப்படைக் கடமை என்று நான் கருதுகின்றேன். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என  யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனமொன்று இந்திய அரசின் அனுசரணையில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை  நேற்று (13) தெல்லிப்பழை அம்பனைப் பகுதியில் திறந்து வைத்துள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர்  மேலும் உரையாற்றுகையில்-

இன்று இந்தியா உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் காணப்படுவது பெருமைக்குரிய விடயம்.  நாங்கள் பாடங்களில்  கிறிஸ்து பிறப்பிற்கு  முன், கிறிஸ்து பிறப்பிற்குப் பின் எனக் கற்பதுண்டு. இதே போன்று இலங்கையின் வடமாகாணத்தைப் போருக்கு முன், போருக்குப் பின் என நாம் குறிப்பிட முடியும்.

போருக்குப் பின்னர்தான் இந்தியத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமென்பது எங்களுடைய முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில் சென்ற வருடம் நூறு வர்த்தகர்கள் தமிழகத்திலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தார்கள். அவ்வாறு விஜயம் செய்தவர்களில் ஒருவரான தில்லைராஜாவின்  முயற்சியில் யாழ்ப்பாணத்தில் இன்று இந்த அலுமினியத் தொழிற்சாலை திறந்து வைக்கப்படுகிறது. இந்த அலுமினியத் தொழிற்சாலையால் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் சிலருக்கு வேலை வாய்ப்புக் கிட்டும்.

வடக்கில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்த நிறுவனத்தின் பணிப்பாளராகவுள்ள தில்லைராஜா பல திட்டங்களைக் கொண்டிருக்கின்றார். அவருடைய திட்டங்கள் அனைத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் எப்பொழுதும் துணையாகவிருக்கும் என்றார்.

Related posts: