கார்பன் உரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இயலுமை எமக்கு உள்ளது – செவனகல சீனி உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, June 5th, 2021

சீனி உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி, கார்பன் உரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதாக செவனகல சீனி உறங்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரையில், இரசாயன உரத்திற்காக செலவிடப்பட்ட 25 கோடி ரூபா நிதியை இதற்காக பயன்படுத்தக்கூடிய இயலுமை தமக்கு உள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் காமினி ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

சீனி உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி கார்பன் உரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்பதை ஆய்வு செய்ததன் பின்னரே செவனகல சீனி நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது சீனி உற்பத்தி நிறுவனத்தில், பெருமளவான கார்பன் உரத்தை உற்பத்தி செய்வதற்கான பிரிவுகள் நிர்மாணிக்கப்படுவதாகவும் செவனகல சீனி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் காமினி ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கண்டியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே, மூலப்பொருட்கள் அவசியமான அளவு இல்லாமையால், இலங்கையில், கார்பன் உரத்தை உற்பத்தி செய்வது கடினமானது எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கார்பன் உரத்தை உற்பத்தி செய்வதற்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, நாட்டின் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கார்பன் உரத்தை இறக்குமதி செய்வதற்கான அவசியம் இல்லை என தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு அவசியமான கார்பன் உரத்தை, உள்நாட்டு மூலப்பொருட்களின் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய தகைமை உள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: