நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு !

Friday, January 29th, 2021

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் பெரும் சர்ச்சையாக எழுந்திருந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி குறித்த கட்டடத்தை திறந்துவைத்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த சர்ச்சையை அரசியலாக்காகது 13 ஆவது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு யாழ் மாநகர சபையே இதற்கான தீர்வை காணமுடியும் என்றும் அதற்கு தனது முழுமையான ஒத்தழைப்பு கிடைக்கும் என்றும் யாழ் மாநகரசபைக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் யாழ். மாநகர முதல்வர் .மணிவண்ணனின் துரித நடவடிக்கை காரணமாக உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகள் சீரமைக்கப்படுகின்றன.

இதன்படி, சீரமைப்புச் செய்யப்பட்ட பெயர் பலகையொன்று மாநகர முதல்வரிடம் இன்று காண்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

அங்கு ஒவ்வொரு மாவட்டப் பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதுதொடர்பாக, யாழ். மாநகர சபையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பெயர் சீரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சில தினங்களில் சீரமைப்பு வேலைகள் முடிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: