பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள்: நுகர்வோர் பெரிதும் பாதிப்பு!

Monday, March 30th, 2020

பெரும்பாலான வர்த்தகர்கள் அத்தியாவசியப்பொருட்களைக் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில வர்த்தகர்கள் காய்கறிகள் மற்றும் பொருட்களை சாதாரண விலையை விடவும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்வதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் கூட மனிதநேயமற்ற விதத்தில் நடந்து கொள்கின்றனர் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி  உள்ளிட்ட 6 மாவட்டங்களை தவிர ஏனைய 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊடரங்குச்சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

குறித்த மாவட்டங்களின் பிரதான நகரங்களில் 6 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. எவ்வளவு தான் அறிவுரைகள் வழங்கப்படாலும் ஒரு சிலர் சமூக இடைவெளியையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.

இன்றைய ஊரடங்கு தளர்வின்போது வடக்கு மாகாணத்தை விட நுவரெலியா, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.

ச.தொ.ச. நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், மொத்த மற்றும் சில்லறைக் கடைகளில் அணிவகுத்து நின்று நீண்டநேரம் காத்திருந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். மரக்கறிச்சந்தையிலும் சன நெருக்கடி காணப்பட்டது. எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் அதிக வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சில வர்த்தகர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொண்டாலும் பெரும்பாலானவர்கள் இலாபம் உழைப்பதிலேயே குறியாக இருந்து வழமையைவிட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதையும் கட்டுப்பாட்டு விலைகளை அப்பட்டமாக மீறுவதையும் காணமுடிந்தது..

Related posts: