பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கிகாரம்!

Wednesday, February 16th, 2022

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவுவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிராமிய மட்டத்திலான குடும்ப அலகுகளில் தொழில் முயற்சிகளுக்கு ஆர்வம் காட்டும் பெண்களை அடையாளங் கண்டு, தொழில் முனைவுகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆரம்ப மூலதனத்தை வழங்குவதன் மூலம் ‘ஒரு கிராமத்தில் ஒரு பெண் தொழில் முயற்சியாளரை’ உருவாக்கும் நோக்கில், பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் (Home Shop) வலையமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 15,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

குறித்த தொழில் முயற்சியாளர்கள் வறுமையொழிப்பு தொடர்பான செயலணியின் ஆலோசனையின் பிரகாரம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டலின் கீழ் பிரதேச யெலாளர்களால் அடையாளங் காணப்படுவார்கள். முன்மொழியப்பட்டுள்ள சிறியளவிலான பல்பொருள் நிலையங்களுக்காக 200 – 400 சதுர அடிகள் கொண்ட வீட்டின் ஒருபகுதியையோ அல்லது அவ்வீட்டைத் திருத்தியமைத்தல் அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் புதிதாக நிர்மாணித்துக் கொள்ளல் அல்லது தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் புதிதாக நிர்மாணித்துக் கொள்ளல் போன்ற மேற்படி ஏதெனுமொரு முறையின் கீழ் தெரிவு செய்யப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இயலுமை கிட்டும்.

குறித்த சிறியளவிலான பல்பொருள் நிலையங்கள் கணணித் தொகுதி மூலம் இணைப்புச் செய்யப்படுவதுடன், அவ்வியாபார நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அரசாங்கத்ததால் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

அத்துடன் விற்பனைக்கான பொருட்களை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

விசேட அளவுகோல்களின் பிரகாரம் தெரிவுசெய்யப்படும் குறைந்த வருமானங் கொண்டவர்களுக்கு டிஜிட்டல் அட்டை மூலம் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிவாரணப் பொதி வேலைத்திட்டத்தின் கீழ் 2,000  ரூபா பெறுமதியான உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களைப் பயனாளிகள் இப்பல்பொருள் நிலையத்தின் ஊடாக நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கு இதனூடாக இயலுமை கிட்டவுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: