புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, March 4th, 2024

நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளுதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..

இளம் சட்ட வல்லுநர்களுடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நேற்று (03) நடைபெற்ற “வட்ஸ் நியூ” எனும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்..

அத்துடன் மேலும் 62 சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் ஜே.ஆர். ஜெயவர்தன 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியதைப் போன்று  நாட்டின் விரைவான பொருளாதார மாற்றத்திற்காக பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்து, அனைத்து அரச கூட்டுத்தாபனங்களையும்   நிறுவனங்களாக மாற்றி, அந்த அனைத்து நிறுவனங்களையும்  பிரதான கம்பனிகளுக்கு ஒப்படைப்பதற்கு  நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

பொது நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டம், விவசாயச் நவீனமயமாக்கல் சட்டம் என்பவற்றைப் போன்றே இந்த அனைத்து இலக்குகளை அடையக்கூடிய பொருளாதார மாற்றச் சட்டம் கொண்டு வரப்படும். தற்போதுள்ள முதலீட்டுச் சபைக்குப் பதிலாக  முதலீட்டு ஆணைக்குழுவொன்று  உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபைக்குக் கீழுள்ள வர்த்தக வலயங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தக வலயங்கள் என்பன அதன் கீழ்  நிர்வகிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், தேசிய உற்பத்தி ஆணைக்குழு நிறுவப்படும். அத்தோடு சுற்றுலா தொடர்பான புதிய சட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோட்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்கா என்பவற்றின் பாதுகாப்புக்காக புதிய சட்டங்கள் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வர்த்தகத் திணைக்களம் நீக்கப்பட்டு, புதிய சர்வதேச வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டு, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பணிகள் செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 1944ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டங்களே கல்வித்துறையிலும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கல்வித் துறையிலும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டங்கள் கொண்டு வருவதை சிலர் தடுக்க முயன்றாலும் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் அந்த சட்டங்களை யாராலும் ரத்து செய்யவோ அல்லது மறைமுகமாக செயல்படுத்தாதிருக்கவோ முடியாது. வியாக்கியானம் வழங்கும் போர்வையில் நாட்டின் சட்டங்களை மட்டுப்படுத்தி பாராளுமன்ற அதிகாரங்களை மட்டுப்படுத்த சிலர் முயன்றாலும் அவ்வாறு  எதுவும் செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

000

Related posts: