பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் குறித்த பொறுப்பு ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 25th, 2021

பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் ஆளுநர்களும் மாவட்ட செயலாளர்களும் முன்னணியில் இருந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிராமிய மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை விரைவாக பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த நிகழ்ச்சித்திட்டங்களை ஒருபோதும் தாமதப்படுத்த முடியாது என்பதுடன், அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பு ஆளுநர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் ஒப்படைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சில திட்டங்களுக்கு நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் அவை செயற்படுத்தப்படாது உள்ளன. சில திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன. இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்காக அரசாங்கம் பெருமளவு வட்டியை செலுத்தி வருகின்றது.

இதனையிட்டு மக்கள் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் குறை கூறுகின்றனர். மக்களின் தேவைகளையும் மக்கள் அரசாங்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் விளங்கி, அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டு இதுவரையில் ஆரம்பிக்கப்படாது உள்ள மற்றும் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts: