ஆசிரியர் நியமனங்களில் மாற்றமேதும் செய்யமுடியாது – கல்வி அமைச்சு!

Friday, November 3rd, 2017

கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை நீக்க முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

தேசிய கல்வியல் கல்லூரிகளில் இருந்து பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான நியமனம் கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் வைத்து தலைமை அமைச்சரினால் வழங்கப்பட்டது.

நாட்டின் 9 மாகாணங்களைச் சேர்ந்தவர்களில் இருந்தும் குறிப்பிட்ட வீதம் ஆசிரியர்கள் தத்தம் மாகாணங்களிலிருந்து வெளிமாகாணங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதனால் தாம் பெரும் இடையூறுகளைச் சந்திக்கின்றனர் என்று தெரிவித்த அவர்கள் சொந்த மாகாணத்தில் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரினர். வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட 207 ஆசிரியர்களிலும் 39 பேர் பிறமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இன்றுவரையில் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.

இதேநேரம் வடக்கு மாகாணத்தின் 61 ஆசிரியர்கள் ஏனைய மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிலும் பலர் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத நிலமையே காணப்படுகின்றது.

இதனைச் சீர்செய்ய அனைத்து ஆசிரியர்களையும் சொந்த மாகாணத்தில் நியமனம் வழங்குவதற்கோ அல்லது குறைந்த பட்சம் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை அளவினையேனும் சொந்த மாகாண ஆசிரியர்களாக வழங்குவதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதாவது வடக்கே நியமிக்கப்பட்டு இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத 39 பிற மாகாண ஆசிரியர்களையும் மீளப்பெற்று அதே எண்ணிக்கையான ஆசிரியர்களை வடக்கு மாகாணத்திற்கு வழங்குமாறு மாற்று யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டது. குறித்த யோசனையினையும் கல்வி அமைச்சு நிராகரித்துவிட்டது.

Related posts: