பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் – போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்து!

Sunday, October 30th, 2022

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து ‘முன்னெச்சரிக்கை குழுக்கள்’ எனும் குழுக்களை அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்டக் குழுவில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களும் போதைப்பொருள் வர்த்தகர்களின் இலக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் அண்மையில் பெய்த மழையினால் கம்பஹா மாவட்டத்தில் பெருமளவிலான தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தவுக்கு ஆலோசனை வழங்கினார்.

வெள்ளத்தால் தடைப்படும் கால்வாய்களை சுத்தப்படுத்த குறுகிய கால வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், பல கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்கான குறுகிய கால வேலைத்திட்டங்களின் கீழ் மாவட்ட செயலாளரிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: