சமயல் எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் – முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்!

Saturday, December 18th, 2021

எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்க லிட்ரோ காஸ் மற்றும் லாஃப் காஸ் நிறுவனங்களின் தலைவர்கள், எரிவாயு வெடிப்பு சம்பந்தமான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட குழு, நுகர்வோர் அதிகார சபை, தரக்கட்டுப்பாட்டு பணியகம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பொலிஸ் பிரதானிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகும் இந்த பேச்சுவார்த்தையில், சமையல் எரிவாயு வெடிப்புகளுக்கான காரணம், அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரச தலைவர் நியமித்த நிபுணர்கள் குழுவின் முடிவுக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, நாட்டில் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவில் அடங்க வேண்டிய ப்ரோபேன் செறிமானத்தின் அளவு 100 க்கு 30 சதவீதமாகக் காணப்பட வேண்டும் என இலங்கை தரநிர்ணய நிறுவகம் தீர்மானித்துள்ளது.

இந்த அளவு செறிவுடைய எரிவாயுவை மாத்திரமே சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் நாகனந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சமையல் எரிவாயு கொள்கலன்களில் அடங்கும் செறிமானம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நுகர்வோரிடம் உள்ள பகுதியளவில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயுக்களை மீளப் பெற்று அதற்காக ஓரளவு பணத்தைச் செலுத்துமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.

இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து முறைமை ஒன்றைத் தயாரிக்குமாறு நீதியரசர்கள் ஆயம் நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு இணங்கி வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று 18 ஆம் திகதிமுதல் விநியோகிக்கப்பட்டுவருவதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: