தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – எதிர்க்கட்சியினருக்கு தேர்தலின் போது மக்கள் அவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, December 5th, 2022

பொருளாதார நிலைமை நெருக்கடி மிக்கதாகக் காணப்படுகின்ற போதிலும், உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்க்கட்சியினர் சிறந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தேர்தலின் போது மக்கள் அவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது மக்களின் தேவை அல்ல. மக்கள் தேர்தலைக் கோரவில்லை. எனினும் எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றும். தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சிறந்த பதிலை வழங்குவார்கள்.

நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படாதவர்களுக்கு மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் சிறந்த பாடம் புகட்டுவார்கள்.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்காக பாடுபட்டவர்களே இன்று சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தளவிற்கு கட்சி வங்குரோத்தடைந்துள்ளது.

எனினும் நாம் இன்னும் சுதந்திர கட்சியை கைவிடவில்லை. உண்மையான சுதந்திர கட்சியினர் இன்றும் எம்முடனேயே இருக்கின்றனர். நான் கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடுகின்றேன்.

எனினும் இதுவரையில் நான் எடுத்த எந்தவொரு தீர்மானமும் தவறாகவில்லை. தற்போது நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது எவ்வாறு என்று சிந்திக்கவில்லை. மாறாக நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பிலேயே சிந்திக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: