பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அவசியமான உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – ஜனாதிபதிக்கு கல்விமான்கள் கடிதம்!

Sunday, September 12th, 2021

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அவசியமான, உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்விமான்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் கலாநிதி தாரா டிமெல் தலைமையிலான குழு இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

குறித்த கடிதத்தில் –

2020 இல் பெருந்தொற்று ஆரம்பித்ததுமுதல் நாட்டில் 4.3 மில்லியன் மாணவர்கள் எதிர்கொள்கின்ற நிலைமை குறித்து நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

சில வாரங்கள் பாடசாலைகள் திறந்ததை தவிர கடந்த 15 மாதங்களாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. சிலர் பெற்ற இணையவழி கல்வியை தவிர வேறு எவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆசிரியர்களின் போராட்டங்களிற்கு அப்பதால் கடந்த 18 மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் மாணவர் சனத்தொகையின் அரைவாசிப்பேரே இணையவழி வகுப்புகளில் இணைந்து கொண்டுள்ளனர், கிராமப் குதிகளில் இணையவழி கல்வியை பெறுவதற்காக மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை நாங்கள் பார்த்திருக்கின்றோம், இதனைவிட முடக்கப்பட்ட மாணவர்களின் உளவியல் நிலை பெரும் பிரச்சினையாக உள்ளது.

அந்தவகையில் பாடசாலைகளை திறப்பது மாத்திரமே பயனுள்ள தீர்வு கல்விக்கு பொறுப்பாக உள்ள யுனெஸ்கோ, யுனிசெவ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் பாடசாலை கல்வியை நீண்டகாலத்திற்கு பறிப்பதால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை சுட்டிக்காட்டி பாடசாலைகளை திறந்து வைத்திருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதேவேளை இந்த பெருந்தொற்று காலத்தில் கூட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பல நாடுகள் பாடசாலைகளை திறந்துவைத்திருந்தன. இன்றும் அதேநிலை காணப்படுகின்றது.

உலகின் 15 நாடுகள் பாடசாலைகளை மூடியுள்ளன. இலங்கையும் அவற்றில் ஒன்று. பெருந்தொற்றின் தற்போதைய அலையின் தாக்கம் குறைவடைவதால் விரைவில் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலை நிர்வாகிகளிற்கு இரண்டு டோஸ் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள் – 12 முதல் 18 வயதுடைய மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்குவதை தீவிரப்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: