பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன நீக்கம் – உயர்கல்வி ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் அறிவிப்பு!

Tuesday, September 12th, 2023

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

அத்துடன் தேசிய கல்விக் கொள்கையுடன் முறையான வேலைத்திட்டம் தயாரிக்கவில்லை என்றால் இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

எஸ்.டி.ரி.ஐ.கெம்பஸ் நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.  இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தர பரீட்சைக்காக தோற்றிய மாணவர்களில் 45 ஆயிரம் பேரே பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏனைய இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. அவ்வாறு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தேவையாகும்.

அத்துடன் நாடாளுமன்ற விசேட செயற்குழுவொன்றில் எமது நாட்டின் கல்வி முறைமை தொடர்பாக  ஆய்வு செய்து நாங்கள் அறிக்கை ஒன்றை முன்வைத்தோம்.

அரசாங்கம் மாறுகின்ற வகையில், அமைச்சர் மாறுகின்ற வகையில் கல்விக் கொள்கையை மாற்ற இடமளிக்க முடியாது. குறித்த விசேட செயற்குழுவின் தலைவராக செயற்பட்டு நாங்கள் அவ்வாறான பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கிறோம்.

எங்களுக்கு கல்விக் கொள்கை ஒன்று தேவை. தற்போது இருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க நாங்கள் பிரேரித்திருக்கிறோம்.

அந்த ஆணைக்குழுவுக்குள் அரச மற்றும் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தேடிப்பார்க்க  இரண்டு விசேட  பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெறும் தரத்தை சரிபார்க்க தனியான அமைப்பொன்று இருக்க வேண்டும். என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: