பரிசை நம்பி 20 இலட்சத்தை பறிகொடுத்த யுவதி!

Monday, April 9th, 2018

பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமாகி, பிரி்த்தானியாவில் இருந்து பரிசு ஒன்றை அனுப்பி வைப்பதாக கூறி, மாத்தறை ஹித்தெட்டிய பகுதியில் வசித்து 34 வயதான யுவதியிடம் 20 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாவை தமது வங்கிக்கணக்கில் வைப்புச் செய்து கொண்டு, மோசடி செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்ய மாத்தறை மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாத்தறை நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரியும் யுவதியை, பிரித்தானியாவில் இருப்பதாக கூறப்படும் சந்தேக நபர் பேஷ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதன் பின்னர் வட்ஸ்அப் மூலம் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு யுவதியுடன் ஆங்கிலத்தில் உரையாடியுள்ளார்.

யுவதிக்கு பரிசாக அனுப்ப விரும்பும், ஆடை அணிகள், தங்கச் சங்கிலிகள்,ஆபரணங்களின் படங்களை அவர் யுவதிக்கு அனுப்பியுள்ளார். செலவுக்காக 32 ஆயிரம் யூரோக்களை பரிசு பொதியுடன் அனுப்புவதாக சந்தேக நபர் கூறியுள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் யுவதியை வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மற்றுமொரு நபர், நண்பன் வழங்கிய பரிசு பொதியை எடுத்து வந்துள்ளதாகவும் அதனை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவிக்க பணத்தை அனுப்புமாறும் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு அமைய, கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரையான 5 நாட்கள், யுவதி, 20 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாவை, சந்தேக நபர் வழங்கிய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.

பரிசு பொதியை அனுப்பி வைக்க வேண்டுமாயின் மேலும் மூன்று லட்சம் ரூபா தேவையெனக் கூறப்பட்டதாலும் பரிசு பொதி உறுதியளித்தப்படி கிடைக்காத காரணத்தினாலும் சந்தேகமடைந்த யுவதி இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: