பயங்கரவாத அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது – ஜனாதிபதி!

Saturday, July 6th, 2019

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று நாட்டில் நிலையான அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை ஆனந்த பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கான இரண்டு மாடி தங்குமிட விடுதியை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “கடந்த நான்கரை வருட காலப் பகுதியில் எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் அனைத்து மக்களும் தெளிவுடன் வாழக்கூடிய அமைதியான நிலைமை ஒன்று நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் எதிர்பாராத நிலைமை ஒன்று நாட்டில் உருவானபோதும் தற்போது மீண்டும் நாட்டில் அமைதியான சூழல் ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இன்று நாட்டில் உள்ள அனைவர் மீதும் உள்ள பொறுப்பு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதமாகவும் பலமாகவும் முன்னெடுப்பதாகும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: