ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இலங்கையின் பொலிஸ் சேவை தரம் உயர்த்தப்படும் – பிரதமர்!

Monday, November 21st, 2016

ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இலங்கையின் பொலிஸ் சேவை தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையை வலியுறுத்தி நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்டுவதில் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட பொறுப்பிருப்பதாகவும் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பது தொடர்பிலும் பொலிஸாருக்கு முக்கிய கடமை இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் அலுவிகாரை விளையாட்டு மைதானத்தில் பயிலுநர் பயிற்சியை முடித்து வெளியேறியவர்களுக்காக நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேசக்கூடிய உத்தியோகத்தர்கள் இந்த நாட்டுக்கு மிக அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான அனைத்து அம்சங்களை கொண்ட ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இந்த நாட்டு பொலிஸ் சேவை மாற்றியமைக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றத்தடுப்பு விடயம் தொடர்பில் கூடுதலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். இதற்காhக விசேட பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தொழிலை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு அவர்களுக்கான சேமநலன் விடயங்களிலும் கூடுதலாக அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிரதமருக்கு விசேட நினைவு சின்னம ஒன்றையும் இந்த நிகழ்வின் போது வழங்கினார்.அமைச்சர் சாகல ரட்நாயக்க உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

blogger-image-1075572354

Related posts: