நாளை காலை தளர்த்தப்படுகின்றது ஊரடங்குச் சட்டம் – தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை அவசியம் என வலியுறுத்து!

Sunday, April 26th, 2020

தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம்நாளை  27 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேநேரம் நாளை காலை தளர்த்தப்படும் குறித்த ஊரடங்கு சட்டம் மே 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 04 ஆம் திகதி, திங்கள் அதிகாலை 5.00 மணி வரையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்ற அரச நிறுவனங்களும் மற்றும் தனியார் துறையின் தொழிற்சாலைகள், கட்டிட நிர்மாணத்துறை, இதர சேவை நிலையங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை இயக்குவதற்கு அனுமதி உள்ளது.

மேலும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துதொழில் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறித்த செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் அபாய நிலை வலய பிரதேசமாக இனம்காணப்பட்டால்அந்த பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் முழு நாளும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு நோய்த்தொற்றின் அபாயத்தினை விளங்கிக் கொள்ளக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வீடுகளில் இருப்பதும், வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை 100% பின்பற்றுவதும் மக்கள் வழங்கக்கூடிய உயரிய ஒத்துழைப்பு என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் போக்குவரத்துச் சாதனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 1, 2 உள்ளவர்களும்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 3, 4 உள்ளவர்களும்

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 5, 6 உள்ளவர்களும்

ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில்  7, 8 உள்ளவர்களும்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 9, 0 உள்ளவர்களும் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் சமூகத்தின் நலனுக்குத் தடையேற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் எவருக்கும் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அதிக பட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: