நாட்டில் 18 மாவட்டங்களில் கடும் வறட்சி – 85 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிப்பு!

Monday, August 28th, 2023

நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடு முழுவதும் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளுக்கு பௌசர்கள் மூலமே தண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

நாட்டில் 18 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 85,000 குடும்பங்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியினால் 18 மாவட்டங்களில் 291,715 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஓரளவுக்கேனும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 84,643 குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாடுக்கு முகங்கொடுத்துள்ளன.

நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடு முழுவதும் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளுக்கு பௌசர்கள் மூலமே தண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம்வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இலங்கையில் போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. எல் நினோ (El Niமo) விளைவு காரணமாக இவ்வாறு போதிய மழை பெய்யாதிருக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 70,000 க்கும் மேற்பட்டவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளுக்கு பௌசர்கள் மூலமே இங்கு குடிநீர் விநியோகம் இடம்பெறுகிறது.

அத்துடன், மலையக பகுதிகளிலும் நிலவும் கடுமையான வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் குறைந்துள்ளன. இதனால் பல தோட்டப்புறங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: