நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை – நால்வர் உயிரிழப்பு – ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, June 5th, 2021

சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களில் 41 ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 7 பேர் காணமால் போயுள்ளதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 569 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இரத்தினபுரி, அயகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பர, மெதபொல பிரதேசத்தில் நேற்று வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் செத்மினி லக்மாலி பெரேரா என்ற 16 வயது சிறுமி உயிரிழந்தார்.

அவ்வாறே, அயகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெப்பெட்டிபொல கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ரியூபை பயன்படுத்தி பயணித்த 43 வயதான நபரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

புத்தளம், மாதம்ப பிரதேசத்தில் மகுணுவடன பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 21 வயது இளைஞர் உயிரிழந்தார்.

இதேவேளை, மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 23 வயதான யுவதியொருவர் இன்று உயிரிழந்தார்.

இதேவேளை தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை, இன்றுமுதல் படிப்படியாக குறையும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்

கொழும்பு, காலி, கேகாலை, மாத்தறை, கண்டி, மாத்தளை, களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: