புதிய வீதி ஒழுங்கு முறைமை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020

வீதி ஒழுங்கு நடைமுறையை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதிமுதல் வீதி ஒழுங்கு நடைமுறை ஒத்திகை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் அதை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடைப்பிடிக்கப்படும் வீதி ஒழுங்கு நடைமுறைகளை மீறும் வகையில் செயற்படும் சாரதிகளை தெளிவுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.

பேருந்து முன்னுரிமை தடத்தில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கூடுதல் இடத்தை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்படி 4 மருங்குகளை கொண்ட வீதியின் வலது புறத்தில் உள்ள முதலாம் மற்றும் இரண்டாம் ஒழுங்கைகள் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

3 மருங்குகளை கொண்ட வீதியின் வலது புறத்தில் உள்ள முதலாம் ஒழுங்கை பஸ்கள் பயணிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் ஒழுங்கையில் வாகனங்களை முந்திச்செல்ல பயன்படுத்த முடியும் எனவும் இந்திக ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.

வாகன நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் அதாவது ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, பேஸ் லயின் வீதி, ஹய் லெவல் மற்றும் காலி வீதிகளில் வீதி ஒழுங்கு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. கடற்படையினரின் ட்ரோன் கமராக்கள் மற்றும் சி.சி.டி.வி மூலம் வீதி ஒழுங்கு நடைமுறைகள் கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: