நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது – அதில் தலையிடவோ கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Sunday, December 17th, 2023

இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன மற்றும் மத ரீதியாக எவரேனும் செயற்பட முற்பட்டால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை இராணுவம் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட திறமையான இராணுவம் எனவும், அதன் பெருமையைப் பேணுவது அதனுடன் இணைந்த அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் அச்சமின்றி தலைமைத்துவத்தை வழங்குமாறு பிரசன்னமாகியிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இக்கட்டான காலங்களில் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும், அதனை மனதில் கொண்டு நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். அப்போது நாட்டின் இறையாண்மை மட்டுப்படுத்தப்படும். நாட்டு மக்களை சமமாக நடத்தும் வகையில் சமூக முன்னேற்றமும் ஏற்பட வேண்டும்.

பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இதன்போது மிக முக்கியம். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பு ஜனாதிபதி முதல் கீழ்நோக்கிச் செல்கிறது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது. அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது. அதே சமயம் அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன் இலங்கையின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தனித்துவத்தை பாதிக்கும் வகையில் எவரேனும் செயற்பட முற்பட்டால் அல்லது இன மற்றும் மத அடிப்படையில் தனித்தனியாக செயல்பட முயற்சித்தால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்பாடாகும்.

இலங்கை இராணுவம் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆசியாவில் நவீன இராணுவங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது.

மேலும், வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரிய போர்களிலும் நமது பாதுகாப்புப் படைகள் பங்கேற்றுள்ளன.

இந்த பெருமைமிக்க இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாப்பது உங்களின் பொறுப்பாகும். நீங்கள் தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அச்சமின்றி அந்தத் தலைமையை உங்களுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வழங்குங்கள். உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக கடினமான காலங்களில்தான், தலைமைத்துவம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் கடமையை நினைவில் வைத்து நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: