நாடு முழுவதும் அதி உச்சப் பாதுகாப்பு : ஆரம்பமானது வாக்குப் பதிவுகள்!

Saturday, February 10th, 2018

புதிய தேர்தல் முறையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்று (10) சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானது. இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்கப்பதிவகள் நடைபெற்றுவருகின்றன.

உள்ளூராட்சி சபைகளுக்கான 8 ஆயிரத்து 325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 43 அரசியல் கட்சிகளும் 222 சுயேச்சைக்குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபையில் தேர்தல் நடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் அடிப்படையில் அச் சபைக்கான தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 340 சபைகளுக்கே தேர்தல் நடத்தப்படுகிறது. இதனடிப்படையில் 13 ஆயிரத்து 374 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் ஆணைக்குழு பெப்ரல் மற்றும் கபே ஆகிய கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் முதன்முதலாக நடத்தப்படவிருக்கும் கலப்பு முறைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்காக நான்கு நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இதில் தென் கொரியா இந்தோனேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து இருவர் வீதமும் இந்தியாவிலிருந்து நால்வரும் அடங்குவர்.

இறுதியாக 2011 ஆம் ஆண்டே உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத் திருத்தத்தின்படி கலப்பு முறையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் உள்ளூராட்சித் தேர்தல் கால தாமதமானதோடு புதிய கலப்பு முறையில் வட்டார முறையின் கீழ் 60 வீதமான உறுப்பினர்களும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் இம்முறை தெரிவாகின்றனர்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இம்முறை மக்கள் ஒரு மாற்று அரசியல் தலைமை ஒன்றை  ஏற்படுத்தும் எண்ணத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளமையை காணமுடிகின்றது.

அத்துடன் நாடு முழுவதும் அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4000 அதிரடிப் படையினர் உட்பட 65000 பொலிஸாருடன் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: