அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 29th, 2020

அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை கொள்வனவுக்காக வழங்கப்படும்  வவுச்சருக்கு பதிலாக சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நேற்றைய தினம் அமைச்சரவை ஒன்றுக் கூடியது. இதன்போதே இதற்கான அனுமதி கிடைக்க பெற்றதாக அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வருடம்முதல் பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளுக்கு அவசியமான துணிகளை வழங்கும் பொறுப்பில் கூடிய வீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

பாரிய மற்றும் சிறியளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உயர் தரத்திலான துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தங்கொட்டுவ, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு துணி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவினங்களை 68 வீதத்தினால் சேமிக்க முடியுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு துணியை கொள்வனவு செய்வதன் மூலம் கல்வி அமைச்சுக்கு வருடாந்தம் 80 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான நிதியை சேமிக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.

பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கொட்டுவ கைத்தொழில் பேட்டை தொடர்பாக முன்வைத்த பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி இதன்போது அவதானத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: