நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும்: விருப்பு வாக்கு இலக்கங்களை வழங்குவதும் ஒத்திவைப்பு – தேர்தல் ஆணைக் குழு!

Wednesday, May 13th, 2020

ஒத்தவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தோர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடாத்துவதா இல்லையா என்பதனை எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தரப்புக்களினால் உச்ச நீதிமன்றில் பொதுத் தேர்தல் தொடர்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் தேர்தல் ஆணைக்குழுவினை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் நாட்டின் தற்போதைய நிலமைகள் குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி ஆராய்ந்து பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதை தொடர்ந்தும் ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆணைக்குழு கூடி இது தொடர்பாக கலந்துரையாடியதை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சாதாரணமாக தேர்தல் நடைபெறும் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கப்பட வேண்டும். இது தேர்தல் நடத்தப்படுவதன் ஆரம்பமாக கருதப்படுகிறது.

எனினும் நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய விருப்பு வாக்கு இலக்கங்களை வழங்குவதை ஒத்திவைக்க நேரிட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் ஜூன் 20ம் திகதி தேர்தலை நடத்தவுள்ளதாக கூறி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றது என அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: