நாடாளுமன்று இசைந்தால் ஆண்டிறுதிக்குள் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய !

Thursday, April 26th, 2018

ஏதாவது ஒரு முறையை தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் உடனடியாக அங்கீகரித்தால் வடக்கு, கிழக்கு உட்பட 6 மாகாணங்களுக்கான தேர்தலை ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய.

தேர்தல்கள் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவித்ததாவது:

ஒக்ரோபர் மாதம் கலையும் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளையும் ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தலை நடத்த வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு முன்னர் தேர்தல் திருத்தச் சட்டங்களை உருவாக்க வேண்டும். அவசரமாக தேர்தல் திருத்தங்களை முன்னெடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துள்ளோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இடம்பெற்ற நெருக்கடிகளைத் தற்போதும் விமர்சிக்கின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை 2002 ஆம் ஆண்டு தொடக்கம் ஆராயப்பட்டது.

2012 ஆம் ஆண்டு 22 இலக்க சட்டத்தின் ஊடாக திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோதும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனது. அதேபோல் தேர்தல் முறைமையில் மாற்றங்களை முன்னெடுப்பது என்ற வாக்குறுதி கடந்த அரச தலைவர் தேர்தலில் களமிறங்கிய இரண்டு வேட்பாளர்களாலும் முன்வைக்கப்பட்டது.

இந்த நாட்டின் 120 இலட்சம் மக்களும் அதை அங்கீகரித்துள்ளனர். அதை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் முறைமை ஒன்றை மாற்றியமைக்க மக்கள் வரம் கிடைத்துள்ளது. அதனை நிராகரிக்க முடியாது. தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கப் போவதில்லை.

தேர்தல் திருத்தச் சட்டத்தை உருவாக்க காலம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லை நிர்ணய அறிக்கையை ஒருமாத காலத்தில் அங்கீகரிக்க முடியும். அவ்வாறு ஒருமாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றால் அதன்பின்னர் மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும். கடந்த தேர்தலைப் போல அவசரப்பட்டு நடவடிக்கைகள் எடுக்காது பொறுமையாக எம்மால் செயற்பட முடியும்.

யாருக்கும் காலதாமதம் ஏற்படுத்த தேவை இருப்பின் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது. தேர்தல் திருத்தங்களை நாம் உருவாக்கவில்லை. அதேபோன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் உருவாக்குவதும் இல்லை. நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுமே அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். தவறுகள் ஏற்படும்போது எம்மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தலை நடத்த நான்கு தெரிவுகள் உள்ளன. தேர்தல் முறைமையை மாற்றி புதிய தேர்தலை நடத்துதல், 50:50 முறைமையை மாற்றியமைத்தல், அல்லது இப்போது உள்ள முறைமையில் தேர்தலை நடத்துதல், அல்லது எவ்வாறான தீர்வு என்பது குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுத்தல் என்பனவாகும்.

இவற்றில் ஒன்றை முன்னெடுத்து மக்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். அதையே நாம் கூறுகின்றோம். என்ன முறைமையிலேனும் தேர்தலை நடத்த வேண்டும். ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெற வேண்டும். அதைத் தாண்டிய விமர்சனங்களை நாம் முன்னெடுக்கப்போவதில்லை.

எல்லை நிர்ணய அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட முடியவில்லை என்றால் தலைமை அமைச்சர் தலைமையில் நியமிக்கப்படும் குழுவில் மீளாய்வு செய்ய வேண்டும். அல்லது 50:50 முறைமையில் மாற்றங்களை கொண்டுவந்து சட்ட திருத்தம் செய்தல் வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அவ்வாறும் இல்லையேல் இவை அனைத்தையும் நீக்கிவிட்டு மீண்டும் பழைய முறைமையில் தேர்தலை நடத்தும் சட்ட திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

இவற்றை செய்து முடிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற அங்கீகாரம் அவசியமாகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் மூன்று மாகாண சபைகள் கலையும். இவற்றைச் செய்து முடிக்கும் பட்சத்தில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்த முடியும் என சகல நாடாளுமன்ற பிரதிநிதித்துவ கட்சிகளுக்கும் அறிவிக்கவுள்ளோம்.

இது தொடர்பில் கூட்டத்திலும் நாம் தெரிவிக்கவுள்ளோம். அனைத்து தேர்தல்களையும் ஒரு தடவையில் நடத்த வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அவ்வாறு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் மட்டுமே அவ்வாறு நடத்த முடியும். ஒரே நாளில் நடத்த வேண்டும் என்றால் அது கடினமாக அதேபோல் எதிர்க்கட்சிகளைப் பாதிக்கும் வகையிலும் அமையும்.

அவ்வாறு ஒரே தடவையில் நடத்த வேண்டும் என்றால் இப்போது கலையவுள்ள மூன்று மாகாண சபைகளையும் ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாண சபைகளையும் இணைத்து ஆறு மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒக்ரோபர் மாதம் தேர்தலை நடத்த முடியும். அதற்கும் முன்னர் எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

Related posts: