தொடரும் அஞ்சல் உத்தியோகத்தர் போராட்டம் – மக்கள் அவதி!

Friday, June 15th, 2018

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் உத்தியோகத்தர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 12 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டம் தொடர்வதால் நாட்டில் உள்ள அஞ்சல் சேவைகள் அனைத்தும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இந்தப் போராட்டம் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து வருடங்களாக நீடித்துவரும் அஞ்சல் சேவை தரம்11 உத்தியோகத்தர்களின் நியமனங்களை உடனடியாக உறுதி செய்தல், அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கான தீர்வாக உறுதி செய்த அமைச்சரவைப் பத்திரத்திற்குத் தாமதமின்றி ஒப்புதல் வழங்குதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த தொழிற்சங்கம், குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்க சங்க உறுப்பினர்களை ஒன்றிணையுமாறும் கோரியுள்ளது.

இதேவேளை ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கம், இலங்கைத் தபால், தந்தி ஊழியர் சங்கம், தேசிய தபால் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், இலங்கைத் தபால் தந்தி ஊழியர் சங்கம், இலங்கை கனிஷ்ட தபால் தரம் பிரிக்கும் உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை உப தபால் அதிபர்கள் சங்கம் என்பன மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இவை அனைத்துமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அஞ்சல் யாப்பு மறு சீரமைக்கப்படாமை, 6/2006 சுற்றிக்கைகள் தொடர்பில் தீர்வு வழங்கப்படாமை, 2 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு. 5 வருடங்கள் கடந்த 2 ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்.

கணனி தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய். ஜனவரி 10 ஆம் திகதி வாக்குறுதியளித்த அமைச்சரவைப் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு. 2012 பொறுப்புப் பரீட்சையை நடைமுறைப்படுத்து, பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக வழங்கு.

விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக்கொடு, பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1 ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என்.7 வேதன மட்டத்தைப் பெற்றுக்கொடு, வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைத்தே தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசியவாதத்தைப் பேசி வாக்குகளை அபகரித்தவர்களால் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை - ஈ.ப...
உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்ற...
நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணை முடியும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் - இராஜாங்க அமைச்சர்...