நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணை முடியும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பிரதி சபாநாயகரிடம் கோரிக்க!

Saturday, March 11th, 2023

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு அமைய நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணை முடியும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்ற பிரதி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிதி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தை, சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த நாடாளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த இடைக்கால உத்தரவின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தொலவத்தை கடந்த செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

முன்னதாக மார்ச் 03 அன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொலவத்த எழுப்பிய சிறப்புரிமை மீறல் தொடர்பான கேள்வியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்த விடயம் நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய சிறப்புரிமை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியினர், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்து உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒத்திவைக்கும் முயற்சிகள் குறித்து ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது

Related posts: