தீர்வு தள்ளிப்போகுமானால் போராட்டம் வேறுவடிவில் திசைதிரும்பும் – பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!

Monday, October 24th, 2016

 

 

இரண்டு மாணவர்களின் படுகொலைக்குப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதுடன், ஒரு மாத காலத்திற்குள் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

20 ஒக்டோபர் 2016 அன்று நள்ளிரவு வேளையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் படுகொலைசெய்யப்பட்டமையினை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.இரு மாணவர்களையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு  எம்மாலான சகல உதவிகளையும் வழங்குவோம் என உறுதியளிக்கின்றோம்.

போருக்குப் பின்னைய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினையும் முழு தமிழ் சமூகத்தினையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலைகள் தொடர்பான விசாரணைகள் முழுமையாக நடைபெற்று சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்பு நிலை மீளுருவாக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

ஆரம்பத்தில் பொலிஸார் இக்கொலைகளை விபத்தாக காட்ட முயன்றமை பொலிஸாரினால் பக்கச்சார்பின்றி இவ்விசாரணைகள் செய்யப்படுமோ என்ற கேள்வியை முன்நிறுத்துகின்றது. எனினும் யாழ்ப்பாண நீதவானின் முழுமையாக வழிகாட்டலில் இவ்விசாரணைகள் நடைபெறுமாயின் பக்கச்சார்பற்ற விசாரணை சாத்தியமாகலாம் என நாம் கருதுகின்றோம்.

ஆயினும் விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெறவேண்டுமென்ற விருப்பம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இல்லாதவிடத்து கடந்த காலங்களைப் போன்றே இத்தகைய அநீதிகளுக்கு தீர்வு கிடைக்காது போய்விடும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எனவே, யாழ். பல்கலைக்கழக பீடங்களில் மாணவர் ஒன்றியங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாவது,

  1. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப்பிரதிநிதிகளினது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையினை உறுதிப்படுத்த வேண்டும்.
  2. கொலைகளை விபத்தாக காட்ட முனைந்தமைக்கான பொலிஸாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழுமையாக விசாரிக்க வேண்டும்.
  3. மனித உரிமை ஆணைக்குழு, உள்ளூர், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களை இவ்வழக்கின் நீதி விசாரணையினை முழுமையாக அவதானிக்க வேண்டும்.
  4. விசாரணைகள் காலதாமதமின்றி முடிவுறுத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  5. இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முழுமையான அரசால் வழங்கப்படும் இழப்பீடு அக்குடும்பத்தின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்

இதற்கான நியாயமான தீர்வு கிடைக்கும் வரை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் மாணவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் சார்பாக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவர் கந்தசாமி ரஜிவன் ஊடகங்களுக்கு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு போன்று எமது மாணவர்களுக்கும் நீதி கிடைக்காமல் இழுபட்டுக்கொண்டே போனால் ஆர்ப்பாட்டம் வேறு வடிவில் திசைதிரும்பும்குறித்த சம்பவத்தில் இறந்த மாணவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும், அத்தோடு சிறுவயதிலிருந்து அவ்விரு மாணவர்களையும் வளர்ப்பதற்கு ஏற்பட்ட செலவு மற்றும் அவ்விரு மாணவர்கள் வேலை செய்வதன் மூலம் கிடைக்கின்ற தொகையையும் அவர்களது பெற்றோர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை மாதாந்தம் வழங்க வேண்டும்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களிலும் கல்விச் செயற்பாடுகள் நடைபெறமாட்டாது என மாணவ ஒன்றிய தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தாம் முன்னெடுத்த போராட்டத்திற்கு உதவி செய்தவர்களுக்கும், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் மாணவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மாணவ ஒன்றிய தலைவர் குறிப்பிட்டார்.

14650564-640x381

Related posts: