ஜப்பானின் இராட்சத போர்க்கப்பலும் இலங்கை வருகிறது!

Wednesday, March 15th, 2017

ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசுமோ என்ற இந்தப் பாரிய போர்க்கப்பல் வரும் மே மாதம் தென் சீனக் கடல் வழியாக மூன்று மாதப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்த ஜப்பானிய போர்க்கப்பல் இணைந்து கொள்ளவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் , இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இசுமோ தரித்து நிற்கவுள்ளது.

248 மீற்றர் நீளம் கொண்ட உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பலான இசுமோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளோட்டம் விடப்பட்டது.

இதில் 7 நீர்மூழ்கி எதிர்ப்பு உலங்கு வானூர்திகளும், இரண்டு தேடுதல் மீட்பு உலங்கு வானூர்திகளும் தரித்திருக்கும். எனினும் 28 விமானங்களை நிறுத்துகின்ற வசதிகள் இந்த கப்பலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜப்பானின் கடற்படை பலத்தை வெளிப்படுத்தும் முதல் பயணமாக, இசுமோவின் இந்தப் பயணம் கருதப்படுகிறது.

Related posts: