திருகோணமலை கடற்பரப்பில் இந்திய – இலங்கை கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்!

Monday, October 19th, 2020

இந்திய – இலங்கை கடற்படையினரின் மூன்றுநாள் கூட்டு பயிற்சி திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையின் கடற்படைகள் ‘ஸ்லிநெக்ஸ்’ என்னும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘ஸ்லிநெக்ஸ்’ இருதரப்பு கூட்டு பயிற்சி திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஐ.என்.எஸ். கமோர்தா, ஐ.என்.எஸ். கில்டன் ஆகிய போர்க்கப்பல்கள் கலந்துகொள்கின்றன.

இதுதவிர, இந்திய போர்க்கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக உலங்குவானூர்திகள் மற்றும் சேத்தக் ரக உலங்குவானூர்திகள், கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.

அதேபோல் இலங்கை கடற்படை சார்பில் எஸ்.எல்.என். சயூரா என்ற ரோந்து கப்பலும் கஜபாகு என்ற பயிற்சி கப்பலும் கலந்துகொள்கின்றன. இதற்கு முன்னர் ‘ஸ்லிநெக்ஸ்’ கூட்டு பயிற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாகப்பட்டினம் அருகே நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: