டெப் கணனிகள் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல் !

Tuesday, July 2nd, 2019

தேசிய பாடசாலைகளின் முன்னோடி செயற்திட்டமாக மாத்திரமே உயர் தர மாணவர்களுக்கான டெப்  கணனிகளை பெற்றுக்கொடுக்க அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சகல உயர்தர பாடசாலை மாணவர்களுக்கும் டெப் கணனிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனை 2017ஆம் ஆண்டிலேயே அமைச்சரவையில் முதன்முதலாக சமர்ப்பிக்கப்பட்டது.

கல்வி அமைச்சின் ஊடாக முன்வைக்கப்பட்ட இந்த ஆலோசனைக்கு, நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் இதனை ஆரம்பிப்பது பொருத்தமற்றது எனவும் முதற்கட்டமாக அதனை ஒரு சில தேசிய பாடசாலைகளில் மாத்திரம் முன்னோடி செயற்திட்டமாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக அத்தியவசிய பாட விதானத்திற்குரிய விடயங்கள் தவிர்ந்த ஏனைய இணையத்தளங்களுக்கு இந்த டெப் கணனிகளின் ஊடாக பிரவேசிப்பது தடை செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதற்கமைய கல்வி செயற்பாடுகளுக்கு மேலதிகமாக வேறு விடயங்களுக்கு பிரவேசிக்கும் ஆற்றல் தடுக்கப்பட்டு இந்த டெப் கணனிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த முன்னோடி செயற்திட்டத்தின் வெற்றிக்கமைய அதன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இத்தகைய செயற்திட்டங்கள் தேசிய பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதே குறித்த ஆலோசனை பற்றிய அமைச்சரவையின் யோசனையாகவும் அமைந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts: