256 மாணவர்கள் வடமாகாணத்தில் 9 பாடங்களில் ஏ சித்தி!

Friday, March 31st, 2017

கடந்த ஆண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளனர்.

இதன் பிரகாரம் வலய ரீதியில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 110 மாணவர்களும் , வடமராட்சி கல்வி வலயத்தினில் 50 மாணவர்களும் , வவுனியா தெற்கு வலயத்தில் 34 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.அதே போன்று வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 19 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மன்னார் கல்வி வலயத்தில் 18 மாணவர்களும் , தென்மராட்சி கல்வி வலயத்தில் 12 மாணவர்களும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களில் தலா 7 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஏனைய நான்கு வலயங்களிலும் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் இல்லாத போதிலும் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்று இம் முறை ஓர் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளது.இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிற்கு அமைவாக 8 பாடங்களில் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1500 என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களிற்கு மாகாணத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இந்த பெறுபேற்று வீதம் மேலும் அதிகரிக்க பாடுபடுவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: