அதானி நிறுவனத்தின் முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு !

Thursday, May 18th, 2023

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவாலை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரிந்த பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதிலும் புத்துயிர் பெறுவதிலும் கவனம் செலுத்தி வரும் இலங்கைக்கு அதானி குழுமத்தின் முதலீடு முக்கியமானது.

2020இல் சர்ச்சைக்குரிய மையமாக மாறிய கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதும் இதில் அடங்குகிறது.

இந்த ஆண்டு பெப்ரவரியில் அதானி குழுமம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் பூனேரியில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க ஒப்புதலைப் பெற்றது.

இந்தநிலையில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கான மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விரைவில் கையெழுத்திடுவார்கள் என்று மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கேபிள் இணைப்பு தொடர்பாக இந்தியாவுடன் மிக விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட உள்ளது.

இதேவேளை, தமிழர்களின் நல்லிணக்கப் பிரச்சினையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட கால கோரிக்கை குறித்து  புதிதாக சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும் மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

Related posts: